Sunday, October 7, 2007

ஞானம் ஏன் வந்ததது?

தேடுதலின் துவக்கம்
வெறுமையின் வெளிப்பாடு
ஞானத்தின் ஏற்பாடு
குருவின் வருகை
தியானத்தின் பிரவேசம்
எண்ணத்தின் கழிவு

மொழியின் நிசப்தம்
மௌனத்தின் தெளிவு
புரிதலின் பரிமாணம்
தெரிதலின் தெளிவு
பொய்மையின் விடுதலை
மெய்மையின் ஈர்ப்பு

அச்சத்தின் உச்சம்
மரணத்தை எதிர்கொள்ளல்
யோகத்தின் கூடல்
மாயையை உணர்தல்
அகந்தையின் அழிவு
கன்மத்தின் களைவு
மும்மலம் மறைவு

முழுமையின் நோக்கம்
பிரம்மத்தில் இணைதல்
நிறைவின் பரவசம்
நிம்மதியின் முடிவு

சலனத்தின் தொடர்ச்சி
பிறப்பின் ஆரம்பம்
புலன்களின் சுகிப்பு
துன்பத்தின் எல்லை

அறிவின் தொலைவு
மனதின் ஆழம்
மறைவின் அறியாமை
இருளின் ஆதிக்கம்

சுயத்தின் ஆளுமை
பொருளின் நிறைவு
உறவின் நிலையாமை
துறவின் அடையாளம்

பரத்தின் புரிதல்
இருளின் அழிவு
வாழ்வின் தோல்வி
காலத்தின் நீட்சி

காதலின் ஈர்ப்பு
காமத்தின் கூடல்
கற்பின் நிச்சயம்
ஒழுக்கத்தின் பரிச்சயம்

புணர்தலின் உச்சம்
போகத்தின் நிறைவு
இன்பத்தின் தெரிவு
அமைதியின் நிறைவு

அகத்தின் தெளிவு
ஆன்மாவின் விடியல்
அன்பின் ஆனந்தம்
ஆசையின் நிறைவு

வாழ்வின் நோக்கம்
வேண்டுதல் வேண்டாமை
மரணத்தில் இறவாமை
அறவழி மறவாமை

இமைப்பொழுதும் நினைவு
இறைநிலையில் விலகாமை
சிந்தையிலே தெளிவு
சீர்பெறும் நம் வாழ்வு......


Saturday, October 6, 2007

மரணமிலாப்பெருவாழ்வு


சுவாசமும் மூச்சும் செய்வதேனோ!

இடமும் வலமும் இயங்குவதேனோ!

இன்பமும் துன்பமும் உணர்வதேனோ!

ஈர்ப்பும் இழப்பும் இருப்பதேனோ!


ஊழும் வினையும் சேர்ந்ததேனோ!

உடலும் உள்ளமும் சோர்வதேனோ!

நோயும் துன்பமும் வறுத்துவதேனோ!

நிழலில் நிஜமும் மறைவதேனோ!


கடனும் வறுமையும் வந்ததேனோ!

கண்ணீரும் கவலையும் தந்ததேனோ!

பொய்யும் புழுகும் சொல்வதேனோ!

கொலையும் கேடும் நடப்பதேனோ!


மனமும் குணமும் மாறுவதேனோ!

களவும் காமமும் ருசிப்பதேனோ!

பசியும் பயமும் பிறப்பதேனோ!

பிணியும் நோவும் கொள்வதேனோ!

மெய்யுக்குள்ளே மெய்யாக சேர

மேனியொரு துன்பம் மெய்யாக...

பொய்யுக்குள்ளே பொய்யாக வாழ

போடுகிற வேடந்தான் பொய்யாக...


நான் நீ என்னும் அகந்தை

உயிர் போகும் வரை

உடல் வேகும் வரை

உடல் சாகும் முன்னே

உயிர் போகும் முன்னே

மெய்யது உணர்வோம்!

மெய்யது உணர்வோம்!

Tuesday, August 21, 2007

ஞானம் எனபது.....


விதியால் வீழ்வது மூடம்
மதியால் வெல்வது ஞானம்
பொய்மையில் வாழ்வது அவலம்
வெறுமையில் திளைப்பது யோகம்
வெளியில் உணர்வது சூன்யம்
உண்மையில் உறைவது ஞானம்
தெளிவினில் திகழ்வது மௌனம்
பொறுமையில் பெறுவது விவேகம்
நன்மையில் நடப்பது பெருமிதம்
தீமையில் தொடர்வது துன்பம்
கடமையை செய்வது கர்மம்
கண்ணில் உள்ளது கரணம்
கற்பில் சரிவது சலனம்
கருத்தில் நிற்பது கவனம்
வினையை களைவது யோகம்
ஊழில் வீழ்வது ரோகம்
பெண்ணில் இணைவது மோகம்
பெண்ணுள் உறைவது காமம்
வெற்றியில் களிப்பது கர்வம்
மதியில் பிறழ்வது சபலம்
உயிரை உணர்வது யோகம்
உணர்வில் வாழ்வது ஞானம்
வாழ்வில் தோற்பது மரணம்
கதியில் சேர்வது சமனம்
முதுமையில் அழிவது தேகம்
கடைசியில் வெல்வது காலம்
காலத்தில் உள்ளது ஞாலம்
கருத்தில் கொள்வது ஞானம்


Friday, August 17, 2007

மதியும்-திதியும்


மதியது வளர்பிறை மனமது திளைக்கும்

உயிரது பெருகும் உடலது சுகிக்கும்

புலனது உணரும் புருவமத்தி துடிக்கும்

தினமது நடக்கும் முழுமதியில் முற்றும்

திதியது தேய்பிறை திரைகடல் குறுகும்

உயிரது வற்றும் நோயது தோன்றும்

புலனது அடங்கும் புரிதல் தொடங்கும்

செயலது வேண்டாம் செய்தால் மங்கும்

கருமதி தொடக்கம் நிறைமதி முடிவும்

மனமது இயங்கும் மதியது பொங்கும்

குறைமதி தவிர்த்தும் வளர்மதி சேர்த்தும்

உயிரது உணர்வோம் மெய்யது காண்போம்.

Friday, June 15, 2007

இறையச்சமும்- விழிப்புணர்வும்...தேடுதலின் தொடக்கம்...

காதற்ற ஊசியும் வார கடை வழிக்கே...

கண்டவர் விண்டிலை-விண்டவர் கண்டிலை..

கடைவிரித்தேன் கொள்வாரில்லை...

மழித்தலும் நீட்டலும் வேண்டாமே...

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்..

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும்...

தன்நெஞ்சே தன்னைச் சுடும்...

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கம் வேண்டாமோ...

நன்மக்கள் பேறு கிட்டாதோ...

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை...

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் எங்ஙனம் ...

இருவினையும்-திருவினை ஆகுமோ?

வேண்டுதல் வேண்டாமை இனி எப்போதும் வேண்டாமோ....

Tuesday, June 12, 2007

யோகமும் அதன் மருத்துவ விளக்கமும்-ஓர் விஞ்ஞான பார்வை


ஓரு யோகி உயிர், மனம், உடல் இவை மூன்றையும் இசைவாக(Hormonius) வேறுபாடின்றி வைத்திருப்பதால் அங்கு தூண்டுதல் (stimulation), துலங்குதல் (Inhibition) என்ற இயல்பற்ற (abnormal) எதிர்செயல்-விளைவுகள் (negative feedback mechanism) நிகழ்வதில்லை.



அவர்களுடைய உடற்செல்களின் வளர்சிதை( Metobolism) மாற்றம் சமச்சீரானது, இயல்பானது ஒழுங்கானது, அதில் ஏற்றத்தாழ்வுகள் என்ற மிகுதல், குறைதல் இன்றி ஒத்த, பொருந்திய நிலையில் வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.



இங்கு உயிர் என்றால் அது விஞ்ஞானத்தில் இல்லாத ஒன்று என்று இன்றைய நிலையில் உள்ள அறிவியல் தெளிகிறது, இருந்த போதிலும் சிலர் அதை செல்லின் ஊடே உள்ள (ectoplasm) எக்டோபிளாசம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது.



எது எப்படியாயினும் உண்மை உண்மையாகவே இருக்கட்டும், காலம் கனியும் போது அவர்களின் அறிவுக்கு விடை கிடைக்கும்.

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று."- வள்ளுவர்.

இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானியின் வேத வாக்கு.

ஆனால் இதை கற்போரின் அறிவுநிலைக்கு கிட்டுவதில்லை.
ஆக உடற்செல்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு செயலாற்றும்போது அதன் வளர் (anabolism) , சிதை (catabolism) மாற்றங்களில் (metabolic reactions) , மிகுதல், குறைதல் ஏற்பட்டு அதீத வேதியல் மாற்றங்கள் (chemical imbalnces) நிகழ்கிறது. இவைகளே நோய் செய்யும் வாதம், பித்தம், சிலேத்துமம் என சித்தர்கள் கண்டு தெளிந்தனர்.


1.வாதம்(neurological imbalances)

2.பித்தம் (gastroentrological imbalances)

3.சிலேத்துமம்(Hormonal imbalances)

என்ற மூன்று அளவீடுகளுக்குள் சுருங்கச்சொன்னார்கள்.

ஆகவே நோய் என்பது சமச்சீரற்ற வளர்ச்சிதை (Metabolic disturbances)
மாற்றாத்தால் தோன்றுகிறது.

இந்த இயக்கம் அல்லது உந்துதலில் ஏற்படும் குறைகள், நோய்களை
சரி செய்யவே (மறு+உந்து= மருந்து) மருந்து கொடுத்து சமன் செய்யப்படுகிறது.

நோய் வந்தபின் மருந்து உட்கொண்டு சீர்செய்வதை விட , அன்றன்று
உடலில் ஏற்படும் உடற்செயல் மாற்றங்களை யோகப்பயிற்சியினால்
நெறிபடுத்துவதே யோகியின் நீள் ஆயுள், இறவாமை, மகிழ்ச்சியின் ரகசியங்கள்.

உடற்பயிற்சினால் உடலில் ஆரோக்கியமும், மனப்பயிற்சியால் மனதில் ஒரு தெளிவும் பெற்று என்றுமே ஒரு புத்துணர்வுடன் வாழ்க்கை ஒரு ஆத்மீக விளக்கமாக சுடர்விடும்.

இதற்கெல்லாம் உதாரண புருசர் எனது ஆசான் ஸ்ரீ வேதாத்திரி மகரிஷியே ஆவார், 95 ஆண்டுகள் நீண்டஆயுள் பெற்று வாழ்ந்து காட்டி, நிறைவுடன் சமாதி எய்தி, அவர் வாழ்ந்து காட்டிய வழியே இன்று எங்களுக்கு பாடமாக அமைந்து விட்டது.

எனவே சுவரை வைத்தே சித்திரம் வரைய முடியும்.
உடலும், உயிரும் உறுதியாக இருந்தால்தான் உண்மையை , மெய்ப்பொருளை தேடி தவம் செய்து பயணிக்கலாம்.
அந்த நிலை, ஆதி நிலை சமாதி (சமம்+ஆதி)நிலை காணும்வரை தொண்டாற்றி இன்பம் காண்போம்!

வாரீர்! வாரீர்! வாழ்க வளமுடன்.

http://www.vethathiri.org/











Monday, June 11, 2007

யோகமும் நவீன மருத்துவம்-ஓர் விளக்கம்





யோகம் செய்து உடலையும், மனதையும் நெறிபடுத்துவன் யோகி அல்லது சித்தன் எனப்படுவான்.

இந்த யோகிகள், சித்தர்கள் எவ்வாறு தங்களை நோயின்றியும் , முதுமையின்றியும் நீண்ட ஆயுளோடு வாழமுடிந்தது என்பது இன்றைய நவீன அறிவியலுக்கு புரியாத புதிராக உள்ளது.


உயிரையும், உண்மையையும் உணராத விஞ்ஞானம் என்றுமே மெய்ஞானத்தோடு தோற்றுப்போகிறது.

" உடம்பை வளர்த்தேனே! உயிரை வளர்த்தேனே!"ଭଭ- என்பது திருமூலர் வாக்கு.

எனவே உடல் என்பது உயிரை சுமக்கும் ஓரு கருவியாகும்.

உடலை நெறிபடுத்தினால் உயிரும் நிலைக்கும் ,ஆயுளும் நீளும் என தீர்க்கமாக சித்தர்கள் தெளிந்து கண்டார்கள். அதன் விளைவாக ஆராய்ந்து கண்டதே யோகமும், யோகாசனம் என்கிற உடற்பயிற்சி முறைகளாகும்.

மேலும் சூழ்நிலை,விதிவசத்தின் காரணமாக உடல் நோயுற்றால் அதை குணபடுத்த அவர்கள் செய்த இயற்கைமருத்துவமே ஆயுர்வேதமும், சித்தமருத்துவமாகும்.

சித்தர்களின் வாழ்க்கை முறை மூன்று நோக்கங்களை அடிப்படையாக கொண்டது

1. மகிழ்போகம்

2.ஈதல்

3. இறவாமை


இவ்வாறே அவர்கள் வாழ்ந்து பயின்ற யோகக்கலையை மேலும் வேண்டுவோருக்கு பயிற்றுவித்தார்கள்.

அவற்றின் எச்சங்களே இன்று நாம் காணும் யோகமுறைகளாகும்.

மருத்துவ அறிவியல் மேன்மை பொருந்தியதும், மதிக்கதக்கதும் கூடியதாகும்,ஆனால் அதன் பயனாக சிகிச்சை முறைகளும், நோய்களும் கூடியுள்ளது என்பதே மறுக்கமுடியாத அனுபவ உண்மையாகும்.

நோயின்றி வாழ வழியறியாத நவீன மருத்துவம் என்றுமே முழுமையாகது. ஆகவேதான் மேலைநாட்டினர் விடைதெரியாத மனநோய்களையும்,உடல்நோய்களையும் ஆராய்ந்து தீர்க்க வழியில்லாமல் யோகத்தின் உண்மையை உணர்ந்து, யோகத்தை நம்மிலும் மேலாக பயின்று பயனடைந்து , மற்றவர்களுக்கு பயிற்றுவித்தும் வருகிறார்கள்.

வாழ்க்கையை வாழக்கற்று கொடுக்கும் யோகிகளுக்கு நாம் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளோம்.

வாழ்வாங்கு வாழ வாழ்க வளமுடன் என வாழ்த்துவோம்.
வாரீர்! வாரீர்!.... www.vethathiri.org

தொடரும்....

Thursday, May 24, 2007

நான் காணும் ஞான பாரதி....

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் திண்ணத் தகாதென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

மிடிமையும் அச்சமும் மேவிய என்னெஞ்சில்
குடிமை புகுந்தன கொன்றவை போக்கென்று

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

தன்செயல் எண்ணி தவிப்பது தீது இங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

துன்பமினியில்லை சோர்வில்லை தோற்ப்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

நல்லது தீயது நாமறிவோமே அன்னை
நல்லது நாட்டுக தீமை ஓட்டுக !

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!
---------------------------------------------------------

மனதி லுறுதி வேண்டும்
வாக்கினி லெயினிமை வேண்டும்

நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்

தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்திலுறுதி வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்

மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்

உண்மை நின்றிட வேண்டும்.

நானும் நீயும்....மெய்புலம்பல்


மெய் மறந்தேனோ! மெய்யும் மறந்தேனோ!
பொய் உரைத்தேனே பொய்யும் உரைத்தேனோ!

உயிரும் உணர்வும் நீயென்று அறியாமல்
உரைத்தேனே பொய்மையுள் உறைந்தேனே!

நேர்மையும் நீதியும் நீயென்று நினையாமல்
நெறிபிறழ்ந்தேனோ! மெய்மறந்தேனோ!

மதியிழந்தேனோ! மதியிழந்தேனே!
மயக்கத்தில் மதிகெட்டேனே!

அறிந்தேனே! மெய் அறிவேனே!
அறிவறிந்தேனே! அகமறிந்தேனே!

நான் அறிவேனோ! நான் அறிந்தேனே!
நானே நீயென்று மெய்யும் அறிவேனோ....

விதியது ஊழ் வினையது
வினைவது விளைவது- இனி ஏது....

நின்னை சரணடைந்தேனே!
முன்னை வினை அறுப்பேனோ!

நிற்பதுவும் நடப்பதுவும்
நிகழ்ந்ததுவும் நிகழ்வதுவும்
நீயின்றி நானில்லை....
நான் அன்றி இங்கு ஏதும் உண்டோ?

மெய்மறவேனே! இனி மெய்மறவேனே......

Sunday, May 20, 2007

ஓசோவின் முத்துக்கள்-ஞானம் தேடுவோருக்கு வித்துக்கள்


"கடவுள் உன்னை ஒவ்வொரு கணமும் சோதிக்கிறார்
சிரித்துக்கொண்டே அதை ஏற்றுக்கொள்.
சோதிக்கத் தகுதியுள்ளவனாக உன்னை அவர்
தேர்ந்தெடுத்தது மிகவும் இனிமையானது." - ஓசோ

"உனக்கு நீயே விளக்கமாயிரு.தூண்டுதல் என்றால்
நீ யாரையோ பின்பற்றுகிறாய் என்று அர்த்தம்."- ஓசோ

"வாழ்வு ஓர் எல்லையில்லாத புதிர், ஆகவே அறிவு
மிகுந்தவர்கள் வாழமுடிவதில்லை! வாழ்வு குழந்தைத்தனம்
கொண்டோர்க்கே உரியதாக இருக்கிறது." - ஓசோ

"நீங்கள் எதன்மேல் பிடிப்பு வைத்திருந்தாலும், நீங்கள் அதனால்
ஆக்கிரமிக்கப்படுவீர்கள். அதை இழந்து விடுவோமோ
என்று பயப்படத் தொடங்குவீர்கள்." - ஓசோ

"புத்திசாலித்தன மற்றவன் எளிதில் புரிந்து கொள்ளப்படுகிறான். அவன்
இந்த சமுதாயத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறான். அவனை மதிப்பிட
மதிப்பீடுகளையும், குணங்களையும் சமுகம் வைத்திருக்கிறது.ஆனால்
ஓரு அறிவுஜீவியை மதிப்பிட சமூக்கத்திற்கு பல வருடங்களாகும்." - ஓசோ

Saturday, May 19, 2007

யோகம் என்பது-எனது பார்வையில்...


யோகம் ஒரு விஞ்ஞானமாகும், இதை நவீன உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்தும், பரவியும் வருகிறது.

நம்மில் பெரும்பாலோர் யோகம் அல்லது யோகா என்பதை உடற்பயிற்சி முறை என்று தவறான எண்ணம் கொண்டுள்ளோம் .

உண்மையில் யோகாசனம் என்பதே நீங்கள் காணும் ஆசனா அல்லது உடற்பயிற்சி முறையாகும். இவைகள் யோகத்தின் முதல்படியாகும், உடலை நெறிபடுத்தி ,நோயின்றி நீண்ட ஆயுள் பெற்று வாழ்வாங்கு வாழ வழிவகுக்கும்.

யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு-" இணைந்திருத்தல் அல்லது சேர்ந்திருத்த்ல்" என்று பொருள் படும், நமது செந்தமிழில் "தவம்" என்பதே சரியானதாகும்.

நாம் செய்யும் எந்த செயலிலும் ஒற்றை மனதுடன் வேறுபாடின்றி லயித்து செய்வதே யோகம் அல்லது தவமாகும்.

"தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு"

என சுருங்கச்சொல்லுகிறது தமிழ்மறை வள்ளுவம்.

தவம் செய்து வருவதால் மனமானது விழிப்படைந்து எதைச்செய்யினும் சரிவர செய்யும், மனதின் உற்றுநோக்கும் திறன் கூடி , ஞாபக சக்தியும் அதிகரிப்பது கண்டறிந்த உண்மையகும்.

யோகம் என்பது மனதை உயிரின் மேல் வைத்து கவனிப்பது அல்லது தியானிப்பது என்பது எளிமை பொருளாகும்.

ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய வித்து அல்லது மூலாதாரம் அமைந்துள்ள குதத்தின் மேல் பகுதியில் குண்டலினி மகாசக்தி இயக்கதில் உள்ளது. இது அறிவின் தரத்திற்கு ஏற்ப மேலெழுச்சி பெற்று ஒளிரும்.

அட்டாங்க யோகமும் இதையே தெளிவு பட விளக்குகிறது.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினியை ஒவ்வொரு நிலையாக எட்டாவது நிலையான தலையின் உச்சியான பிரம்மரந்திரம் அல்லது

துரியத்தில் மேல் நோக்கி செலுத்துவதாகும். இதையே எட்டு சக்கரங்களாகவும் கொள்ளுவர்.

யோகத்தில் பல முறைகள் உள்ளது. இதை தகுந்த குருவின் துணையோடே கற்றுக்கொள்ள வேண்டும்.

எளியமுறை குண்டலினி யோகத்தை நீங்கள் ஐயமின்றி சுவாமி வேதாத்திரி அவர்களின் முறைப்படி உங்கள் அருகாமையிலுள்ள

மனவளக்கலை மன்றத்தில் பொருட்செலவும்,காலச்செலவின்றி

கற்று பயன் பெறலாம். இணைய முகவரி www.vethathiri.org ல் சென்று மேலும் தகவல்கள் பெறலாம்.



மேலும் வளரும்...

Thursday, May 17, 2007

மெய்யன்பர்களே-விழித்துக்கொள்ளுங்கள்!


வாழ்க்கை என்பது வெறும் கேளிக்கை மட்டுமா?
இன்பத்தில் பூரிக்கும் இந்த மனம்,
ஏன் துன்பத்தில் சிக்கித்தவிக்கும் போது நொந்து போகிறது, சிந்தியுங்கள்!
உடல்-உயிர்-மனம், என்றுமே இசைவாக வைக்க கற்றுக்கொள்ளுவோம், வாருங்கள் வரவேற்கிறோம் .
www.vethathiri.org வாழ்க வளமுடன்!